திங்கள், 23 மே, 2011

அழகியின் டைரி குறிப்பு

ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நாட்களில் சியர் லீடர் அழகிகளின் ஒவ்வொரு மணி நேரமும் எப்படி இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக உற்சாக ஆட்டம் போடும் அழகியின் ஒருநாள் டைரி குறிப்புகள் இதோ. இது, பெங்களூரில் எழுதப்பட்டது.


காலை 8.00: விழித்து எழுந்ததும், அருகில் உறங்கி கொண்டிருந்த கரோலினை எழுப்பினேன். முகத்தை கழுவி விட்டு, ஜிம்முக்கு சென்று 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தேன். சிறிது நேர ஓய்வுக்கு பின் சற்று நேரம் யோகா பயிற்சியையும் மேற்கொண்டேன்.

9.00: உடற்பயிற்சி முடித்து விட்டு அறைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் வியர்வையாக இருந்தது. சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வெந்நீர் போட்டு நன்றாக குளித்தேன்.

10.00: அனைவரும் காலை உணவுக்கு சென்றோம். இன்றைய தினம் இதுதான் ஒரு மகிழ்ச்சியான தருணம். குழுவில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்தோம். 

மதியம் 12.00: நானும், கரோலினும் எங்கள் குழுவில் உள்ள சில பெண்களுடன் சேர்ந்து ஒரு டாக்சியில் பிரிகேட் ரோட்டிற்கு ஷாப்பிங் சென்றோம். பெங்களூரில் ஷாப்பிங் செய்வதற்கென்றே பல இடங்கள் இருக்கின்றன. அங்கேயே ஒரு ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்.

4.00: ஷாப்பிங்கை முடித்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பி வந்தோம். ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு, அவசர அவசரமாக மைதானத்திற்கு கிளம்பினோம்.

6.00: அனைவரும் மைதானத்தற்கு வந்து கொண்டிருந்தோம். எனது ஐ&பாட்டில் சில மியூசிக்கை போட்டு கேட்டேன். சில நடன அசைவுகளை கண்முன்னே நினைவுபடுத்திக் கொண்டேன். மைதானத்திற்குள் நுழைந்தபோது, கூடியிருந்த கூட்டத்தை பார்த்தேன். இந்த கூட்டம்தான் எந்நேரமும் எங்களது ஆட்டத்திற்கு தூண்டுகோலாக இருக்கும்.

இரவு 8.00: எங்களுடைய அணி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது. இப்போதுதான் எங்களுடைய வேலை ஆரம்பிக்கிறது. கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் எங்களை உற்சாகப்படுத்தியது. கிரிக்கெட் வீரர்களுக்கும் கூட அந்த கூட்டம் ஆர்வத்தை தூண்டியிருக்கும்.

12.30: போட்டி முடிந்ததும் நடைபெறும் இரவு விருந்தில் கலந்து கொண்டோம். அனைத்து வீரர்களும் அங்கே இருந்தனர்.

அதிகாலை 2.30: எங்களுடைய முழு நாள் ஒன்று முடிவுக்கு வந்தது. அதிகாலை விமானத்தை பிடித்து வேறு நகரத்திற்கு செல்ல வேண்டும். புதிய நகரம், அங்கே புதுவிதமான சூழல். மீண்டும் அதே பணிகள்.
--------------------------

சியர் லீடர்-ஒரு பார்வை

'சியர் லீடர்' முறை முதன் முதலாக அமெரிக்காவில் 1884-ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டிகளின்போது, வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. பின்னர் 1896-ம் ஆண்டில், ஜான் காம்ப்பெல் என்ற மாணவர் 6 மாணவர்களைக் கொண்டு சியர் லீடர் குழுவை ஏற்படுத்தினார்.

1923-ம் ஆண்டு முதல் சியர் லீடர் குழுக்களில் பெண்களும் அறிமுகம் ஆனார்கள். தற்போது 97 சதவீதம் அளவுக்கு பெண்கள் மட்டுமே சியர் லீடராக உள்ளனர். சியர் லீடர்களுக்காகவே, 1906-ம் ஆண்டில் அமெரிக்காவில் தபால் கார்டும் வெளியிடப்பட்டது. 


சியர் லீடர் அழகிகளாக, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட அழகிகளையே தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சில கடினமான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

முதலாவது ஐ.பி.எல். போட்டிகளின்போது ஷார்ட்ஸ், குட்டைப்பாவாடை என இவர்கள் காட்டிய கவர்ச்சியை பார்த்து, சமுதாய காவலர்கள் பலர் பொங்கி எழுந்து விட்டனர். மும்பையில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

அரை குறை உடைகளில், இவர்களை பார்த்தவுடன் அனைவரும் ஏதோ மாடலிங் துறையில் இருப்பவர்கள் என்று நினைக்க தோன்றும். ஆனால் அவர்கள் அனைவரும், வக்கீல்கள், டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள் என முக்கிய பணிகளில் இருப்பவர்கள். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்களும் அந்த குழுவில் இருக்கிறார்கள்.

ஐ.பி.எல்.போட்டிகளில், சியர் லீடர் அழகிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை இதுவரை எந்த அணி நிர்வாகமும், வெளிப்படையாக தெரியப்படுத்தவில்லை. ஆனாலும், அங்கு கோடிக்கணக்கில் புழங்கும் பணத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு அணியும், நடன குழுவினருக்கு நல்ல சம்பளம் வழங்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
------------------------

ஐ.பி.எல். நடன அழகிகள்

கடந்த 2008-ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கிய சமயத்தில், போட்டிகளை பிரபலப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள்தான் சியர் லீடர்கள் எனப்படும் நடன மங்கைகள். போட்டிகளின்போது, ஒவ்வொரு அணி சார்பிலும், தனித் தனி குழுக்களாக இந்த அழகிகள் களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.


இந்த போட்டிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரும்பாலும் உஸ்பெக்கிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகளே கொண்டுவரப்பட்டனர். பின்னர், உக்ரைன், பெலாரஸ் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து கலக்கினார்கள். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர்களும் கூட அதிக அளவில் சியர் லீடர்களாக உள்ளனர்.

தற்போது இந்தியாவிலிருந்தும் நடன மங்கைகளைத் தேர்வு செய்ய ஆர்வம் பிறந்துள்ளது. காரணம், இந்திய அழகிகளும், நாங்கள் எந்த வகையிலும் வெளிநாட்டு அழகிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சவால் விடும் வகையில் கவர்ச்சி ஆட்டத்திற்கு தயாராகி விட்டதுதான்.

பந்து, பவுண்டரி எல்லையை தாண்டும் ஒவ்வொரு முறையும் 'பேட்டிங்' அணியை சேர்ந்த அழகிகள் ஆடுவார்கள். அதேபோன்று, வீரர்கள் அவுட் ஆகும் சமயத்தில் பந்து வீசும் அணியின் நடன மங்கைகளின் குத்தாட்டத்தைப் பார்க்கலாம்.

இரண்டு அணிகளைச் சேர்ந்த இரண்டு நடன குழுக்களின் ஆட்டத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, 'கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா' என்ற எண்ணம் வருவது இயற்கையே. மைதானத்தில், பின்னணி இசைக்கு ஏற்றார்போல, அவர்கள் துள்ளி குதித்து ஆடுவது அமர்க்களம்.



ஐ.பி.எல். போட்டிகளில் சியர்லீடர்கள் என்றாலே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிதான் பிரபலம். இந்த முறை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நடன குழுக்களைச் சேர்ந்த அழகிகளை களம் இறக்கியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஐ.பி.எல். போட்டியின்போது, அந்த அணி மிகவும் ஆடம்பரமாக, வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் சியர்லீடிங் குழுவில் இருந்து அழகிகளை கொண்டு வந்திருந்தது. கவர்ச்சி உடைகளில் அவர்கள் கலக்கிய விதம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை போலவே, இந்த ஐ.பி.எல். போட்டியில் புதிதாக களம் கண்டுள்ள கொச்சி அணியும் உக்ரைன் நாட்டு கட்டழகிகளை களம் இறக்கி உள்ளது.


கொச்சி அணி வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றும்போதும், பந்தை பவுண்டரிக்கு விரட்டும்போதும் யானை பிளிறுவது போன்ற இசை அரங்கத்தையே அதிரச் செய்கிறது. அதன் தொடர்ச்சியாக, நடன மங்கைகள் மேடைக்கு வந்து குத்தாட்டத்தை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றனர்.

மற்றொரு புதிய அணியான புனே வாரியர்ஸ், தங்களுடைய சார்பில் உள்நாட்டிலேயே நடன மங்கைகளை தேர்வு செய்துள்ளது. அவர்களுடைய மராட்டிய பாணி நடனமும் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கிறங்கடிக்கிறது.


கடந்த முறை ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஆண்களையும் குத்தாட்டத்தில் ஈடுபடுத்துகிறது. அந்த அணியின் சியர் லீடர்கள் ஓரளவு உடலை மறைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். நடன மங்கைகளின் ஆட்டத்துடன் டிரம்ஸ் சிவமணியின் தாளமும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

தற்போது, ஐ.பி.எல்.லில் ஆட்டம் போடும் அழகிகள், இந்திய நடன உத்திகளையும் கையாள தொடங்கி விட்டனர். அதற்காகவே, அவர்களுக்கு சில பாலிவுட் பிரபலங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், புனே வாரியர்ஸ் அணிக்கு பாலிவுட் நடன அமைப்பாளர் கணேஷ் ஹெக்டே மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனுஸ்ரீ சங்கர் ஆகியோர்தான் நடன பயிற்சியாளர்கள்.

என்னதான் ஆட்டம்போட்டாலும், இந்த அழகிகள் சிலருக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது என்பது நமக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஒவ்வொரு முறையும் மேடைக்கு வந்து ஆடுவதற்கு, அணி நிர்வாகிகள்தான் சிக்னல் கொடுக்கிறார்கள்.


வழக்கமாக, ஐ.பி.எல் போட்டியில் ஆடும் நடன அழகிகள், 6 விதமான நடன முறைகளை கொண்டு ஆட்டம் போடுகின்றனர். பவுண்டரி செல்லும் போது ஒரு விதமாகவும், சிக்சருக்கு பறக்கும்போது வேறு விதமாகவும் ஆட்டத்தில் கலக்குகிறார்கள். அதேபோன்று, விக்கெட்டுகள் சரியும் போதும் வித்தியாசமான முறையில் நடனத்தை காட்டுகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடி, சிக்சர், பவுண்டரிகளுக்கு பந்துகளை விளாசி, ரசிகர்களைக் கவரும் அதேசமயத்தில், ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரசிகர்களை கவர்ந்தவர்கள் இந்த அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------

ஞாயிறு, 22 மே, 2011

அரச குடும்பத்து திருமணம்

‘‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்’’ என்ற பெருமை பெற்ற நாடு இங்கிலாந்து.


உலகில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் இங்கிலாந்து நாட்டுக்கென்று பெரிய பாரம்பரியமும், தனி அந்தஸ்தும் உண்டு. ஒரு காலத்தில் இந்த பூமிப்பந்தில் உள்ள பல நாடுகள் இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகையின் கீழ் இருந்தன. பின்னர் அவை ஒவ்வொன்றாக இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கின. அப்படி விடுதலை பெற்ற நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று என்று சொல்ல தேவை இல்லை.

ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ள இங்கிலாந்தில் பாராளுமன்ற ஆட்சி முறை உள்ளது. அந்த நாட்டு மக்கள் புதுமையை போற்றி வரவேற்ற போதிலும், பழமையையும் பாரம்பரிய பெருமையையும் பேணி பாதுகாக்க மறந்துவிடுவதில்லை. அதனால்தான் அங்கு ஜனநாயக ஆட்சி நடைபெற்ற போதிலும் தொன்று தொட்டு வரும் மன்னர் குடும்பமும் உள்ளது.

மன்னர் குடும்பத்துக்கென்று பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும், இங்கிலாந்து மக்கள் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையையும் வைத்து இருக்கிறார்கள். எனவே, ‘‘இங்கிலாந்து நாட்டின் ராணி’’ என்ற பதவி என்பது மிகவும் கவுரவமான மிக உயர்ந்த பதவி ஆகும்.
தற்போது இங்கிலாந்தின் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்துக்கு வயதாகி விட்டது. அவருக்கு பிறகு அந்த நாட்டின் ராணியாக வலம் வருவார் என்று இங்கிலாந்து மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் இளவரசர் சார்லசின் மனைவி டயானா.

(சார்லசிடம் இருந்து பிரிந்ததன் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய அவர், பின்னர் விபத்து ஒன்றில் சிக்கி இந்த உலகத்தை விட்டே பிரிந்து விட்டார்.)



சார்லஸ்-டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஆண்ட்ரூ என்று 2 மகன்கள்.
இளவரசர் வில்லியம் வருகிற 29-ந் தேதி கதே மிடில்டன் என்ற பெண்ணை மணக்க இருக்கிறார். உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இவர்கள் திருமணம், இங்கிலாந்தில் உள்ள 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோதிக் தேவாலயத்தில் நடைபெற இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறும் இந்த அரச குடும்ப திருமண விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,900 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சார்லஸ்-டயானா திருமணத்திற்கு பின்னர் தற்போது நடைபெறும் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் திருமணம்தான் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்பார்ப்போடு, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் காலத்திற்கு பிறகு அந்த நாட்டின் உயரிய பதவியான ராணி பட்டத்திற்கு வரப்போவது யார்? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. 

தற்போது ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் ராணி இந்த வாரத்தில் 85-வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார். அதோடு இன்னும் ஒரு வருடத்தில் அவர் ஆட்சி பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. 

இங்கிலாந்து இளவரசியான டயானா உயிரோடு இருந்தவரை ராணி பதவிக்கு எந்த போட்டியும் இல்லாமல் இருந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக இளவரசர் சார்லசை விவாகரத்து செய்து விட்டு டயானா பிரிந்து சென்று விட்டார். (பின்னர் நடைபெற்ற விபத்து ஒன்றில் அவர் இறந்து போனார்.) அதற்கு பின்னர் உலகம் முழுவதும் டயானாவின் மரணம் எப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியதோ, அதேபோன்று அந்த நாட்டின் ராணி பட்டமும் சர்ச்சைக்குரிய ஒரு விவாத பொருளாகவே மாறி விட்டது.


கடந்த 2005-ம் ஆண்டில் சார்லஸ்-டயானா பிரிவிற்கு காரணமாக கருதப்பட்ட கமீலாவையே இளவரசர் சார்லஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய தொடர்பை காரணம் காட்டித்தான் டயானா விவாகரத்தே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கமீலாவை சார்லஸ் திருமணம் செய்துகொண்ட பின்பும் அந்த நாட்டின் ராணி பதவிக்கான சர்ச்சை வலுவாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. 

இதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. சார்லசுக்கு கமீலா 2-வது மனைவி. அவர் ஏற்கனவே வேறு ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதுதான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். கமீலாவுக்கு முன்னாள் கணவரின் மூலமாக பிறந்த 2 மகன்கள் இருக்கின்றனர்.

எனவேதான் அவரை இங்கிலாந்து ராணியாக ஏற்றுக்கொள்வதற்கு அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இங்கிலாந்துக்கு ராணி ஆகிறவர் கன்னிப்பெண்ணாக அரச குடும்பத்திற்கு வரவேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு.

அதனால்தான், டயானா உயிரோடு இருந்தவரை அந்த நாட்டு மக்கள் கமீலாவை ஒரு எதிரியாகவே கருதினார்கள். பத்திரிகைகள்கூட அவரை வேண்டாத ஒருவராகவே சித்தரிக்க தொடங்கின.

ஆனால், இந்த நிலைமை தற்போது மாறி வருகிறது. டயானாவின் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும்கூட கமீலாவை நேசிப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர். தங்களது தாய் இருக்க வேண்டிய இடத்தில், கமீலா இருப்பது அவர்களுக்கு வருத்தமாக தெரியவில்லை. 
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு அடுத்தபடியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒழுக்கமாக இல்லை என்றே சொல்லலாம். விவாகரத்து, தனிமனித ஒழுக்கமின்மை, ஊதாரித்தனம் போன்ற பல பிரச்சினைகளில் அவர்கள் சிக்கி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில்தான் இளவரசர் வில்லியமுக்கும், கதே மிடில்டனுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது. இளவரசர் வில்லியம் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான், முதன் முதலாக கதே மிடில்டனை சந்தித்தார். அப்போதிருந்தே அவர்கள் இருவரும் காதலர்களாக உலகம் முழுவதும் அறியப்பட ஆரம்பித்து விட்டனர். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக, வசீகர தோற்றத்துடன் இருக்கும் கதே மிடில்டனுக்கு 29 வயது ஆகிறது. இவர் வில்லியமை விட 5 மாதங்கள் மூத்தவர். 

சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு ஒன்றில் உலகின் மிக அழகான இளவரசிகளின் பட்டியலில் வரிசையில் டயானாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்தை கதே மிடில்டன் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் ஆண்கள் வரிசையில் இளவரசர் வில்லியம் 5-வது இடத்தில் இருக்கிறார்.

இரண்டாம் எலிசபெத்திற்கு அடுத்தபடியாக வாரிசுரிமை அடிப்படையில் சார்லசுக்கு மன்னர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அப்படியே, அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும்  ராணி பதவிதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் சார்லசை மன்னராக ஏற்றுக்கொண்டாலும்கூட, கமீலாவை ராணியாக அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

பத்திரிகைகள் நடத்திய கருத்து கணிப்புகளிலும்கூட 50 முதல் 60 சதவீதம் பேர் கமீலாவை ராணியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது அவர்களின் கருத்து. அதுதவிர, அவர்கள் இருவருக்கும் வயதாகி விட்டது என்பதும் ஒரு காரணம். முதுமைப் பருவம் அடைந்துவிட்ட சார்லசுக்கு தற்போது 62 வயது ஆகிறது. கமீலாவுக்கு 63 வயது.  

எலிசபெத்தின் காலத்திற்கு பின்னர் ஆட்சி பொறுப்பை சார்லஸ் ஏற்றாலும் அவருக்கு சுமார் 70 வயது ஆகிவிடும். எலிசபெத் ஒருவேளை அவரது தாயாரைப்போல நீண்ட காலத்திற்கு உயிரோடு இருந்தால், சார்லஸ் மன்னர் ஆவதற்கு 80 வயதும் ஆகலாம், அதற்கு மேலும் ஆகலாம். எலிசபெத்தின் தாயார் முதலாம் எலிசபெத் 101 வயதில் கடந்த 2002-ம் ஆண்டில்தான் இறந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.



இந்த காலத்தில் சார்லசும், கமீலாவும் அரச பதவிக்கு வந்தாலும், மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே அவர்கள் ஆட்சி செலுத்த முடியும். அவர்கள் இருவரும் தற்போதே முதுமை பருவத்தை அடைந்து விட்டனர். மன்னர் பொறுப்பிற்கு உரிய கம்பீரமான தோற்றம் சார்லசிடம் இல்லை.
ஆகவேதான், வில்லியம்-கதே தம்பதியினரே அடுத்ததாக இங்கிலாந்து அரசர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சார்லஸ்-கமீலா தம்பதியர் தாங்களாகவே முன்வந்து, மன்னர் பதவியை வில்லியமுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமும் கூட.

கடந்த நவம்பர் மாதத்தில் பத்திரிகை ஒன்றில் வெளியான கருத்து கணிப்பிலும், எலிசபெத்தின் காலத்திற்கு பின்னர் மன்னர் பொறுப்பிற்கு வருவதற்கு வில்லியமுக்கு தான் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு, சார்லஸ் மன்னர் ஆவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கமீலா ராணி ஆவதில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே கமீலா ராணி ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனவே, இங்கிலாந்து ராணி என்ற பெருமைமிக்க உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகிறவர் யார்?  கதே மிடில்டனா அல்லது அவரை விட 34 வயது அதிகமான கமீலாவா? என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
--------------------------
(24-4-2011 அன்று பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரை)

ஆட்டத்தின் மறுபக்கம்

ஐ.பி.எல். போட்டிகள் என்றாலே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம். ஒன்று கிரிக்கெட் போட்டியை காணும் மகிழ்ச்சி. மற்றொன்று, ஒவ்வொரு அணி நிர்வாகமும் ஏற்பாடு செய்துள்ள கண்கவர் நடன அழகிகளின் கவர்ச்சி குத்தாட்டம். 

 
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடும் நடன அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்திற்கு பின்னால் உள்ள கஷ்டங்கள் என்ன? ரசிகர்களை மகிழ்விக்கும் இவர்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கிறார்களா? வெளிச்சத்துக்கு பின்னால் அவர்களுடைய இருண்ட பக்கங்கள் எப்படிப் பட்டவை? விருந்து நிகழ்ச்சிகளில் இவர்களின் நிலைமை என்ன? என்பது போன்ற கேள்விகள் விடை தெரியாமல் உலவிக் கொண்டு இருக்கின்றன.

அப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடையாக வந்தவர்தான் கேப்ரியல்லா பாஸ்குவலட்டோ என்ற 22 வயது சியர் லீடர் அழகி. கவர்ச்சியாக காட்டப்படும் ஐ.பி.எல்.லின் கோர முகத்தை அவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். இது நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த தடவை சுமார் 40 அழகிகள் சியர் லீடர்களாக கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சியர் லீடர் அழகியாக ஒப்பந்தத்தில் வந்தவர்தான் கேப்ரியல்லா பாஸ்குவலட்டோ. இவர்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது சரமாரியாக புகார்களை அள்ளி வீசியிருக்கிறார்.

‘‘கிரிக்கெட் வீரர்கள் சியர் லீடர் அழகிகளுக்கு, செக்ஸ் தொந்தரவு கொடுக்கிறார்கள்‘‘ என்பது தான் அவருடைய புகார்.

‘‘பிளாக்-போஸ்ட்‘‘ எனப்படும் இணையதள வலைப்பக்கத்தில் ‘‘ஐ.பி.எல். சியர் லீடர்களின் ரகசிய டைரி‘‘ என்ற தலைப்பில் சியர் லீடர் அழகிகளின் இருண்ட பக்கங்களை அவர் விலாவாரியாக விவரித்துள்ளார். அந்த வலைப்பக்கத்தில், அவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்தான் தற்போது புகைந்து கொண்டிருக்கிறது.

இதுபற்றி அவர் எழுதி இருப்பதாவது:- 
 கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை, போட்டி முடிந்தபின்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும், இரவு பார்ட்டிகளில், அங்கு நிற்கும் ஒவ்வொரு அழகிகளிடமும், தவறாகவே நடந்து கொள்வார்கள். போகும்போதும், வரும்போதும், அங்கு நிற்கும் அழகிகள் மீது கண்ட கண்ட இடங்களில் கையை வைத்துவிட்டு செல்கிறார்கள்.



நான் அங்கே நின்று கொண்டிருக்கும்போது, கிரிக்கெட் வீரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றே என்னுடைய மனதில் நினைப்பேன். வீரர்கள் வரும்போது, கிரிக்கெட் வீரர்கள் வருகிறார்கள், அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று எனது வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டிருப்பேன்.

இரவு நேர பார்ட்டிகளின்போது, கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் அப்பாவிகள் போல இருப்பதில்லை. அந்த நேரத்தில் தான் அவர்களுடைய உண்மையான முகத்தை பார்க்கலாம். அவர்கள் அனைவரும் சியர்லீடர் அழகிகளை எப்பொழுதும் ஒரு போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். வீரர்கள் ஆசைப்பட்டால் சில நேரங்களில் அவர்களுடன் சியர் லீடர் அழகிகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஏராளமான குற்றச்சாட்டுகளை அந்த வலைப்பக்கத்தில் கேப்ரியல்லா எழுதி இருக்கிறார்.

இந்த மாதிரியான செக்ஸ் சில்மிஷங்களில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சில வீரர்களே அதிகம் ஈடுபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது காதலி அருகில் இல்லாத சமயங்களில், 3 சியர் லீடர் அழகிகளுடன் வலம் வருவார்.
அந்த வீரருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட அழகி ஒருவர் அந்த வலைப்பக்க தகவல்கள் பற்றி சொன்னதால்தான் இந்த விவரங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அதற்கு பிறகுதான், அந்த பக்கத்தை கிரிக்கெட் வீரர்களும் பார்த்தார்கள்.

ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் எய்டன் பிலிஸ்ஸார்ட், மோசஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் இந்த இணைய பக்கத்தை பற்றி அணி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து விட்டார்கள். உடனே, கேப்ரியல்லாவுக்கு அணி நிர்வாகம் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டது. தற்போது அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கேப்ரியல்லா கூறிய செக்ஸ் குற்றச்சாட்டில், சிக்கி உள்ளவர்களில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரீம் ஸ்மித், மோர்னே மார்கல் ஆகியோருடைய பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் இல்லாமலா? அவருடைய பெயரும் அதில் இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டில், இந்திய வீரர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அந்த வலைப்பக்கத்தில் இருந்து, தற்போது அந்த பதிவை கேப்ரியல்லா நீக்கி விட்டார். 



இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, சியர் லீடர் அழகிகள் ஒன்றும் நல்லவர்கள் கிடையாது என்ற புகாரும் எழுந்துள்ளது.

சியர் லீடர் குழுக்களை நிர்வகிப்பதற்கென்றே, 5 மேலாளர்கள் வரை இருக்கிறார்கள். சியர் லீடர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் வெவ்வேறு ஓட்டல்களில் ரூம் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சில அழகிகள், கள்ளத்தனமாக, கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களுக்கு தனியாக வந்து விடுகிறார்கள். இரவு நடக்கும் பார்ட்டிகளில் கூட அந்த அழகிகள் அனைவரும் மதுக் கோப்பைகளுடன் தான் வலம் வருகிறார்கள் என்கிறார் ஒரு ஓட்டல் ஊழியர்.

இதற்கிடையே, கிரிக்கெட் வீரர்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டை சொல்லி, ஒரே நாளில் பிரபலமாகி விட்ட கேப்ரியல்லாவை பேட்டி எடுப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் வரிசையில் நிற்கின்றனர். 

அவர்களிடம், ‘‘நான் சியர் லீடராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதப்போகிறேன். என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்தும், எனது வக்கீலுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு கொஞ்சம் பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அதை நிறைவு செய்பவர்களுக்கு நான் பேட்டி கொடுக்க தயாராக இருக்கிறேன். அப்போது, இதைப்பற்றி மேலும் பேசிக் கொள்ளலாம்‘‘ என்று அவர் கூறியுள்ளார்.

இத்துடன் கேப்ரியல்லா நின்று விடவில்லை. ஐ.பி.எல். நிர்வாகம் எனது ஒப்பந்தத்தை பாதியிலேயே முடித்து விட்டது. இதற்கு இழப்பீடு கேட்டு நான் வழக்கு தொடரப் போகிறேன் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்.


 கேப்ரியல்லாவின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, வெளியில் பார்ப்பதற்கு ஐ.பி.எல். நிர்வாகம் கவர்ச்சியாக காட்சி அளித்தாலும், உள்ளுக்குள் இப்படி எத்தனையோ புகைச்சல்களுடன் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது ‘‘ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்‘‘ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
--------------------------