ஞாயிறு, 22 மே, 2011

அரச குடும்பத்து திருமணம்

‘‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்’’ என்ற பெருமை பெற்ற நாடு இங்கிலாந்து.


உலகில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் இங்கிலாந்து நாட்டுக்கென்று பெரிய பாரம்பரியமும், தனி அந்தஸ்தும் உண்டு. ஒரு காலத்தில் இந்த பூமிப்பந்தில் உள்ள பல நாடுகள் இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகையின் கீழ் இருந்தன. பின்னர் அவை ஒவ்வொன்றாக இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கின. அப்படி விடுதலை பெற்ற நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று என்று சொல்ல தேவை இல்லை.

ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ள இங்கிலாந்தில் பாராளுமன்ற ஆட்சி முறை உள்ளது. அந்த நாட்டு மக்கள் புதுமையை போற்றி வரவேற்ற போதிலும், பழமையையும் பாரம்பரிய பெருமையையும் பேணி பாதுகாக்க மறந்துவிடுவதில்லை. அதனால்தான் அங்கு ஜனநாயக ஆட்சி நடைபெற்ற போதிலும் தொன்று தொட்டு வரும் மன்னர் குடும்பமும் உள்ளது.

மன்னர் குடும்பத்துக்கென்று பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும், இங்கிலாந்து மக்கள் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையையும் வைத்து இருக்கிறார்கள். எனவே, ‘‘இங்கிலாந்து நாட்டின் ராணி’’ என்ற பதவி என்பது மிகவும் கவுரவமான மிக உயர்ந்த பதவி ஆகும்.
தற்போது இங்கிலாந்தின் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்துக்கு வயதாகி விட்டது. அவருக்கு பிறகு அந்த நாட்டின் ராணியாக வலம் வருவார் என்று இங்கிலாந்து மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் இளவரசர் சார்லசின் மனைவி டயானா.

(சார்லசிடம் இருந்து பிரிந்ததன் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய அவர், பின்னர் விபத்து ஒன்றில் சிக்கி இந்த உலகத்தை விட்டே பிரிந்து விட்டார்.)



சார்லஸ்-டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஆண்ட்ரூ என்று 2 மகன்கள்.
இளவரசர் வில்லியம் வருகிற 29-ந் தேதி கதே மிடில்டன் என்ற பெண்ணை மணக்க இருக்கிறார். உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இவர்கள் திருமணம், இங்கிலாந்தில் உள்ள 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோதிக் தேவாலயத்தில் நடைபெற இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறும் இந்த அரச குடும்ப திருமண விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,900 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சார்லஸ்-டயானா திருமணத்திற்கு பின்னர் தற்போது நடைபெறும் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் திருமணம்தான் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்பார்ப்போடு, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் காலத்திற்கு பிறகு அந்த நாட்டின் உயரிய பதவியான ராணி பட்டத்திற்கு வரப்போவது யார்? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. 

தற்போது ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் ராணி இந்த வாரத்தில் 85-வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார். அதோடு இன்னும் ஒரு வருடத்தில் அவர் ஆட்சி பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. 

இங்கிலாந்து இளவரசியான டயானா உயிரோடு இருந்தவரை ராணி பதவிக்கு எந்த போட்டியும் இல்லாமல் இருந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக இளவரசர் சார்லசை விவாகரத்து செய்து விட்டு டயானா பிரிந்து சென்று விட்டார். (பின்னர் நடைபெற்ற விபத்து ஒன்றில் அவர் இறந்து போனார்.) அதற்கு பின்னர் உலகம் முழுவதும் டயானாவின் மரணம் எப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியதோ, அதேபோன்று அந்த நாட்டின் ராணி பட்டமும் சர்ச்சைக்குரிய ஒரு விவாத பொருளாகவே மாறி விட்டது.


கடந்த 2005-ம் ஆண்டில் சார்லஸ்-டயானா பிரிவிற்கு காரணமாக கருதப்பட்ட கமீலாவையே இளவரசர் சார்லஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய தொடர்பை காரணம் காட்டித்தான் டயானா விவாகரத்தே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கமீலாவை சார்லஸ் திருமணம் செய்துகொண்ட பின்பும் அந்த நாட்டின் ராணி பதவிக்கான சர்ச்சை வலுவாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. 

இதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. சார்லசுக்கு கமீலா 2-வது மனைவி. அவர் ஏற்கனவே வேறு ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதுதான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். கமீலாவுக்கு முன்னாள் கணவரின் மூலமாக பிறந்த 2 மகன்கள் இருக்கின்றனர்.

எனவேதான் அவரை இங்கிலாந்து ராணியாக ஏற்றுக்கொள்வதற்கு அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இங்கிலாந்துக்கு ராணி ஆகிறவர் கன்னிப்பெண்ணாக அரச குடும்பத்திற்கு வரவேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு.

அதனால்தான், டயானா உயிரோடு இருந்தவரை அந்த நாட்டு மக்கள் கமீலாவை ஒரு எதிரியாகவே கருதினார்கள். பத்திரிகைகள்கூட அவரை வேண்டாத ஒருவராகவே சித்தரிக்க தொடங்கின.

ஆனால், இந்த நிலைமை தற்போது மாறி வருகிறது. டயானாவின் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும்கூட கமீலாவை நேசிப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர். தங்களது தாய் இருக்க வேண்டிய இடத்தில், கமீலா இருப்பது அவர்களுக்கு வருத்தமாக தெரியவில்லை. 
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு அடுத்தபடியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒழுக்கமாக இல்லை என்றே சொல்லலாம். விவாகரத்து, தனிமனித ஒழுக்கமின்மை, ஊதாரித்தனம் போன்ற பல பிரச்சினைகளில் அவர்கள் சிக்கி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில்தான் இளவரசர் வில்லியமுக்கும், கதே மிடில்டனுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது. இளவரசர் வில்லியம் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான், முதன் முதலாக கதே மிடில்டனை சந்தித்தார். அப்போதிருந்தே அவர்கள் இருவரும் காதலர்களாக உலகம் முழுவதும் அறியப்பட ஆரம்பித்து விட்டனர். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக, வசீகர தோற்றத்துடன் இருக்கும் கதே மிடில்டனுக்கு 29 வயது ஆகிறது. இவர் வில்லியமை விட 5 மாதங்கள் மூத்தவர். 

சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு ஒன்றில் உலகின் மிக அழகான இளவரசிகளின் பட்டியலில் வரிசையில் டயானாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்தை கதே மிடில்டன் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் ஆண்கள் வரிசையில் இளவரசர் வில்லியம் 5-வது இடத்தில் இருக்கிறார்.

இரண்டாம் எலிசபெத்திற்கு அடுத்தபடியாக வாரிசுரிமை அடிப்படையில் சார்லசுக்கு மன்னர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அப்படியே, அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும்  ராணி பதவிதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் சார்லசை மன்னராக ஏற்றுக்கொண்டாலும்கூட, கமீலாவை ராணியாக அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

பத்திரிகைகள் நடத்திய கருத்து கணிப்புகளிலும்கூட 50 முதல் 60 சதவீதம் பேர் கமீலாவை ராணியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது அவர்களின் கருத்து. அதுதவிர, அவர்கள் இருவருக்கும் வயதாகி விட்டது என்பதும் ஒரு காரணம். முதுமைப் பருவம் அடைந்துவிட்ட சார்லசுக்கு தற்போது 62 வயது ஆகிறது. கமீலாவுக்கு 63 வயது.  

எலிசபெத்தின் காலத்திற்கு பின்னர் ஆட்சி பொறுப்பை சார்லஸ் ஏற்றாலும் அவருக்கு சுமார் 70 வயது ஆகிவிடும். எலிசபெத் ஒருவேளை அவரது தாயாரைப்போல நீண்ட காலத்திற்கு உயிரோடு இருந்தால், சார்லஸ் மன்னர் ஆவதற்கு 80 வயதும் ஆகலாம், அதற்கு மேலும் ஆகலாம். எலிசபெத்தின் தாயார் முதலாம் எலிசபெத் 101 வயதில் கடந்த 2002-ம் ஆண்டில்தான் இறந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.



இந்த காலத்தில் சார்லசும், கமீலாவும் அரச பதவிக்கு வந்தாலும், மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே அவர்கள் ஆட்சி செலுத்த முடியும். அவர்கள் இருவரும் தற்போதே முதுமை பருவத்தை அடைந்து விட்டனர். மன்னர் பொறுப்பிற்கு உரிய கம்பீரமான தோற்றம் சார்லசிடம் இல்லை.
ஆகவேதான், வில்லியம்-கதே தம்பதியினரே அடுத்ததாக இங்கிலாந்து அரசர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சார்லஸ்-கமீலா தம்பதியர் தாங்களாகவே முன்வந்து, மன்னர் பதவியை வில்லியமுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமும் கூட.

கடந்த நவம்பர் மாதத்தில் பத்திரிகை ஒன்றில் வெளியான கருத்து கணிப்பிலும், எலிசபெத்தின் காலத்திற்கு பின்னர் மன்னர் பொறுப்பிற்கு வருவதற்கு வில்லியமுக்கு தான் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு, சார்லஸ் மன்னர் ஆவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கமீலா ராணி ஆவதில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே கமீலா ராணி ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனவே, இங்கிலாந்து ராணி என்ற பெருமைமிக்க உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகிறவர் யார்?  கதே மிடில்டனா அல்லது அவரை விட 34 வயது அதிகமான கமீலாவா? என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
--------------------------
(24-4-2011 அன்று பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக